< Back
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா அதிர்ச்சி தோல்வி
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
18 Jan 2024 7:00 PM GMT

ஆஸ்திரேலிய ஓபனில் 2-வது இடம் பிடித்தவருமான எலினா ரைபகினா, தரவரிசையில் 57-வது இடம் வகிக்கும் ரஷியாவின் அன்ன பிளின்கோவாவுடன் கோதாவில் இறங்கினார்.

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-4, 6-7 (3-7), 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் லோரென்ஜோ சோனிகோவை (இத்தாலி) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையும், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் 2-வது இடம் பிடித்தவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), தரவரிசையில் 57-வது இடம் வகிக்கும் ரஷியாவின் அன்ன பிளின்கோவாவுடன் கோதாவில் இறங்கினார். இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்திய நிலையில் 3-வது செட் டைபிரேக்கரில் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போனது. இருவரும் நீயா? நானா? என்று கடுமையாக மல்லுக்கட்டியதால் களத்தில் அனல் பறந்தது. இறுதியில் எதிராளி பந்தை வெளியே அடித்ததன் மூலம் வெற்றிக்குரிய புள்ளியை ஈட்டிய பிளின்கோவா ஒரு வழியாக டைபிரேக்கர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

2¾ மணி நேரம் நடந்த ஆட்டத்தின் முடிவில் பிளின்கோவா 6-4, 4-6, 7-6 (22-20) என்ற செட் கணக்கில் ரைபகினாவை விரட்டியடித்து ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக 3-வது சுற்றை எட்டினார். இருவரும் சேர்ந்து டைபிரேக்கரில் 42 புள்ளியை சேர்த்த வகையில், கிராண்ட்ஸ்லாம் போட்டி வரலாற்றில் நீண்ட நெடிய டைபிரேக்கராக இது பதிவானது.

மேலும் செய்திகள்