ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இகா ஸ்வியாடெக் வெற்றி
|ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
மெல்போர்ன்,
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் சோபியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, கனடாவின் ரெபேக்கா மரினோவுடன் மோதினார். இந்த போட்டியில் பெகுலா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரெபேக்காவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.