அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச், மெட்விடேவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|நோவாக் ஜோகோவிச் தரவரிசையில் 65-வது இடத்தில் உள்ள லெஸ்டினை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அடிலெய்டு,
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 65-வது இடத்தில் உள்ள லெஸ்டினை (பிரான்ஸ்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இத்தாலியின் சோனிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 7-6 (8-6), 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக சோனிகோ விலகினார். இதனால் மெட்விடேவ் 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இதேபோல் ஜானிக் சின்னெர் (இத்தாலி), டெனிஸ் ஷபோவாலோவ் (கனடா) ஆகியோரும் தங்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சீன வீராங்கனை கின்வென் செங் 6-1, 4-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். செக்குடியரசு வீராங்கனை வான்டர்சோவா 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவை சாய்த்தார். விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோரும் 2-வது சுற்றை எட்டினர்.