< Back
மாநில செய்திகள்
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த 2 பேர் ரெயில் மோதி படுகாயம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த 2 பேர் ரெயில் மோதி படுகாயம்

தினத்தந்தி
|
20 Oct 2023 3:14 AM IST

தண்டவாளம், மது குடித்த 2 பேர், ரெயில் மோதி படுகாயம்

மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறான்விளையை சேர்ந்தவர் தினேஷ் (வயது23). ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த லாரி கிளீனர் அபினேஷ் (23), ரதீஷ் (24) ஆகியோரும் நண்பர்கள். ரதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊருக்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 3 பேரும் ஞாறான்விளை ரெயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தைெயாட்டி அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு பயணிகள் ரெயில் வந்தது. அதை பார்த்ததும் போதையில் இருந்த தினேஷ் எழுந்து ரெயிலை நோக்கி சென்றார். உடனே அவரை காப்பாற்ற அபினேசும், ரதீசும் ஓடி சென்று அவரது கையை பிடித்து இழுத்தனர்.

அதற்குள் ரெயில் அவர்கள் மீது மோதிவிட்டு கடந்து சென்றது. இதில் தினேஷ் கீழே விழுந்ததில் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ரதீசுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அபினேஷ் காயமின்றி உயிர் தப்பினார். ஆனாலும் அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். படுகாயம் அடைந்த இருவரும் அலறினர்.

அவர்களது சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்