பஜ்ரங், வினேசுக்கு அளிக்கப்பட்ட சலுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு மல்யுத்த வீரர்கள் போராட்டம்
|பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு அளிக்கப்பட்ட சலுகையை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி தேர்வில் இருந்து பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு இளம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா (65 கிலோ), காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோருக்கு இந்த தகுதி தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும், இருவரும் இந்திய மல்யுத்த அணியில் நேரடியாக இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான போராட்டத்தை ஒரு மாதத்துக்கு மேலாக முன்னின்று நடத்திய பஜ்ரங், வினேசுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டியால் அளிக்கப்பட்ட இந்த சலுகை இளம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பஜ்ரங், வினேஷ் போகத் ஆகியோருக்கு மட்டும் அணி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது நியாயமற்றது. அந்த சலுகையை ரத்து செய்வதுடன், எல்லா வீரர், வீராங்கனைளுக்கும் நியாயமான முறையில் தகுதி தேர்வு போட்டியை நடத்த உத்தரவிட வேண்டும் என்று 23 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆசிய சாம்பியனான சுஜீத் கல்கால், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அந்திம் பன்ஹால் ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு இளம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஜ்ரங், வினேசுக்கு அளிக்கப்பட்ட சலுகையை வாபஸ் பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
போராட்டத்துக்கு பிறகு அந்திம் பன்ஹாலின் பயிற்சியாளர் விகாஸ் பரத்வாஜ் கூறுகையில், 'நாங்கள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரை சந்திக்க விரும்புகிறோம். நாங்கள் எந்தவொரு ஒருதலைபட்சமான முடிவையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டியின் முடிவு தவறானது. இந்திய அணி தேர்வில் இருந்து பஜ்ரங் மற்றும் வினேசுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவே இங்கு வந்து இருக்கிறோம்' என்றார்.