இந்திய மல்யுத்த சம்மேளன அவசர கூட்டம் ரத்து
|அவசர கூட்டத்தில் பிரிஜ் பூஷன் கலந்து கொண்டு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டிய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவருக்கு எதிராக டெல்லியில் 3 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் இந்திய விளையாட்டு அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேற்பார்வை கமிட்டி அமைக்கவும், ஒரு மாத காலத்திற்கு பிரிஜ் பூஜன் ஷரண்சிங் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கவும் மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அயோத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரிஜ் பூஷன் கலந்து கொண்டு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே, பிரிஜ் பூஷன் மீதான விசாரணை முடியும் வரை மல்யுத்த சம்மேளனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக முடக்கியது. இதன் எதிரொலியாக நேற்று நடக்க இருந்த அவசர கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.