
Image Courtesy : @Media_SAI
உலக மல்யுத்த போட்டி: இந்திய வீராங்கனை அன்திம் வெண்கலப்பதக்கம் வென்றார்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 6-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அன்திம் பெற்றார்.
பெல்கிரேடு,
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் 19 வயது இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், சுவீடன் வீராங்கனை எம்மா ஜோனா டெனிஸ் மால்ம்கிரினை சந்தித்தார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அன்திம் 16-6 என்ற புள்ளி கணக்கில் ஐரோப்பிய சாம்பியனான எம்மாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். அத்துடன் அவர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 6-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
மேலும் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான 53 கிலோ எடைப்பிரிவு கோட்டாவையும் கைப்பற்றினார். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் கோட்டாவை உறுதி செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை அன்திம் சொந்தமாக்கினார்.