உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி வெற்றி
|இன்று இந்திய மகளிர் அணி எகிப்து அணியையும், இந்திய ஆடவர் அணி கஜகஸ்தானையும் வீழ்த்தின.
செங்டு,
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சத்யன் ஞானசேகரன் தலைமையிலான இந்திய ஆடவர் அணி பங்கேற்றுள்ளது. இந்திய அணியின் அனுபவ வீரர் சரத் கமல் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் சத்யன், மானவ் தாக்கர், ஹர்மித் தேசாய் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி களமிறங்கியுள்ளது.
நேற்று இந்திய ஆடவர் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இன்று இந்திய ஆடவர் அணி கஜகஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சத்யன் ஞானசேகரன் கஜகஸ்தான் வீரர் டெனிஸை 11-1,11-9,11-5 என்ற கணக்கில் எளிதாக வென்றார்.
அதன்பின்னர் ஹர்மித் தேசாய் கிரில் கிரிஸிமின்கோவிடம் 6-11,8-11,9-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். மூன்றாவது போட்டியில் மானவ் தாக்கர் 12-10,11-1,11-8 என்ற கணக்கில் அலென் குர்மாங்கலியேவை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 4வது போட்டியில் சத்யன் கிரில் கிரிஸிமின்கோவிடம் 11-6,5-11,14-12,9-11,6-11 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இதனால் இந்தியா மற்றும் கஜகஸ்தான் அணிகள் தலா 2-2 என சமனில் இருந்தன.
இதைத் தொடர்ந்து கடைசி போட்டியில் ஹர்மித் தேசாய் 12-10,11-9,11-6 என்ற கணக்கில் டெனிஸை வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கஜகிஸ்தான் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி தன்னுடைய கடைசி குரூப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. தற்போது இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்று குரூப்பில் முதலிடம் பிடித்துள்ளது.
இதேபோல் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, பாராக் சிட்லே உள்ளிட்டோர் அடங்கிய இந்திய மகளிர் அணி இன்று எகிப்து அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.