உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டி; இந்தியா அசத்தல் வெற்றி
|இந்தியாவின் அடுத்த சவாலானது சீன தைபே அணிக்கு எதிராக இருக்கும்.
பூசன்,
தென் கொரியாவின் பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் போட்டிகளில் இந்திய அணி இன்று அதிரடியாக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதனால், 3-வது சுற்று (ரவுண்ட் 16) ஆட்டத்திற்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. இதில், வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறும்போது, பாரீஸ் நகரில் நடைபெறும் 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.
இதன்படி, முதலில் இந்திய மகளிர் அணியானது இத்தாலியை இன்று எதிர்கொண்டது. இதில், இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 3-0 என்ற செட் கணக்கில் நிகோலெட்டா ஸ்டெபனோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 20 நிமிடங்களில் போட்டி நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து நடந்த 2-வது போட்டியில், உலக தர வரிசையில் 36-வது இடத்தில் உள்ள, இந்தியாவின் முதல்தர வீராங்கனையான மணிகா பத்ரா, 3-0 என்ற செட் கணக்கில் கிரோஜியா பிக்கோலின் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 23 நிமிடங்களில் போட்டி முடிவுக்கு வந்தது. 3-வது போட்டியில் இந்தியாவின் ஆய்ஹிகா முகர்ஜி, 3-1 என்ற செட் கணக்கில் கயியா மொன்பார்டினியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதனால், இந்தியா 3-0 என்ற புள்ளி கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியாவின் அடுத்த சவாலானது சீன தைபே அணிக்கு எதிராக இருக்கும்.
இதன்பின்னர் இன்று நடந்த ஆடவர் குழு போட்டியில் இந்திய அணியானது, கஜகஸ்தான் அணியை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இதனால், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் என இரு அணிகளும் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்னும் ஒரு சுற்று போட்டியில் வெற்றி பெற வேண்டி உள்ளது. அதில் கிடைக்கும் வெற்றியை அடுத்தே பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.