உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; 29 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய வீராங்கனை
|உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல்கேரிய வீராங்கனையின் 29 ஆண்டு கால சாதனையை இந்திய வீராங்கனை இன்று முறியடித்து உள்ளார்.
பகு,
அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
இதில், இன்று நடந்த இளநிலை மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டியில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான் (வயது 19) கலந்து கொண்டார்.
இந்த போட்டியில், அவர் தகுதி சுற்றில் 595 புள்ளிகள் சேர்த்து உள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு பல்கேரிய வீராங்கனை டயானா லார்கோவா, 594 புள்ளிகள் சேர்த்து இருந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது.
அதனை சங்வான் இன்று முறியடித்து உள்ளார். இதற்கு முன் 1989-ம் ஆண்டு ரஷிய வீராங்கனை நினோ சலுக்வத்ஜேவின் (593 புள்ளிகள்) சாதனையையும் கூட சங்வான் முறியடித்து இருக்கிறார்.
எனினும், தகுதி சுற்றில் முதல் இடம் வகித்த அவர், 8 பேர் கலந்து கொள்ளும் இறுதி சுற்றில் கடைசி இடம் மட்டுமே பிடித்து, இந்தியாவுக்கான பதக்கம் பெறும் வாய்ப்பை தவற விட்டார்.