< Back
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: நேரடியாக 2-வது சுற்றில் களம்இறங்கும் பி.வி.சிந்து
பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: நேரடியாக 2-வது சுற்றில் களம்இறங்கும் பி.வி.சிந்து

தினத்தந்தி
|
11 Aug 2023 2:57 AM IST

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை சிந்துவுக்கு போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது.

ஹோபன்ஹேகன்,

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடைபெறுகிறது. இதில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நேற்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் ஒரே இந்தியரான பி.வி.சிந்துவுக்கு நேரடியாக 2-வது சுற்றில் களம்இறங்கும் வகையில் முதல் சுற்றில் 'பை சலுகை' வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் அடுத்தடுத்து சுற்றுகள் சிந்துவுக்கு கடினமாக அமைந்துள்ளது. அவர் 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) சந்திக்க வாய்ப்புள்ளது. அந்த தடையை வெற்றிகரமாக கடந்தால் பலம் வாய்ந்த தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோன், 'நம்பர் ஒன்' புயல் அன்சே யங்கை (தென்கொரியா) ஆகியோரை எதிர்கொள்ள நேரிடலாம்.

கடந்த ஓராண்டாக எந்த பட்டமும் வெல்ல முடியாமல் திண்டாடும் சிந்து தொடர்ச்சியான தோல்விகளால் உலக தரவரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை 2019-ம் ஆண்டில் வென்று வரலாறு படைத்த சிந்து மீண்டும் அதே போல் அசத்துவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), ஒலிம்பிக் சாம்பியன் சென் யுபே (சீனா), முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரங்கள் தாய் ஜூ யிங் (சீனதைபே), கரோலினா மரின் (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் வரிந்து கட்டுவதால் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய தரப்பில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் ஆகியோர் விளையாடுகிறார்கள். சமீபகாலமாக தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 9-ம் நிலை வீரரான பிரனாய் முதல் சுற்றில் காலே கோல்ஜோனெனை (பின்லாந்து) சந்திக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவுடன் சவாலை தொடங்குகிறார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான லக்ஷயா சென் முதல் ரவுண்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலுடன் (மொரீசியஸ்) களம் காணுகிறார். ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) முதல் சுற்றில் 36-ம் நிலை வீரர் நேட் நுயேனுடன் (அயர்லாந்து) மோதுகிறார்.

இரட்டையரில் 5 இந்திய ஜோடிகள் ஆடுகிறது. இதில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தை பெற்று கவனத்தை ஈர்த்துள்ள சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஆகிய ஜோடிகள் நேரடியாக 2-வது ரவுண்டில் கால்பதிக்கின்றன. அஸ்வினி பாத்- ஷிகா கவுதம், ரோகன் கபூர்- சிக்கிரெட்டி, வெங்கட் பிரசாத்- ஜூஹி தேவாங்கன் ஆகியோரும் களம் இறங்குகிறார்கள்.

மேலும் செய்திகள்