உலக பேட்மிண்டன் போட்டி: ஆக்சல்சென், யமாகுச்சி 'சாம்பியன்'
|ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றனர்.
டோக்கியோ,
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-5, 21-16 என்ற நேர் செட்டில் கன்லாவட் விதித்சானை (தாய்லாந்து)பந்தாடி மகுடம் சூடினார். நடப்பு தொடரில் ஒரு செட்டை கூட இழக்காமல் வீறுநடை போட்ட 28 வயதான ஆக்சல்சென் உலக பட்டத்தை வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டும் தங்கம் வென்று இருந்தார்.
இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் அகானே யமாகுச்சி 21-12, 10-21, 21-14 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யூ பேவை 68 நிமிடங்கள் போராடி வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
கவுரவமிக்க இந்த போட்டியில் இந்திய தரப்பில் மொத்தம் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலப்பதக்கம் வென்று ஆறுதல் அளித்தது. உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சிறப்பை இவர்கள் பெற்றனர்.