உலக தடகள சாம்பியன்ஷிப்: அமெரிக்காவில் இன்று தொடக்கம்
|உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
யூஜின்,
18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. தடகளத்தில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி இது தான். 49 வகையான பந்தயங்களில் 192 நாடுகளைச் சேர்ந்த 1,972 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மற்றும் பெலாரசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 22 பேர் கொண்ட அணி கலந்து கொள்கிறது. 39 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 2003-ம் ஆண்டு பாரீசில் நடந்த உலக தடகளத்தில் இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலம் கைப்பற்றினார். அதன் பிறகு இந்தியாவுக்கு பதக்கம் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
நீண்ட சோகத்துக்கு இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்தவரான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விடைகொடுப்பார் என்று ஒட்டு மொத்த தேசமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. சமீபத்தில் ஸ்டாக்கோமில் நடந்த டைமண்ட் லீக்கில் 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி புதிய தேசிய சாதனை படைத்தார். சூப்பர் பார்மில் உள்ள அவர் நிச்சயம் டாப்-3 இடத்திற்குள் வந்து விடுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இந்திய வீரர்களில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரர் அவினாஷ் சாப்லே, நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் ஆகியோர் மீதும் நம்பிக்கை தென்படுகிறது. திருச்சி வீராங்கனை தனலட்சுமி 200 மீட்டர் ஓட்டத்திலும், திருவாரூர் வீரர் பிரவீன் சித்ரவேல் மும்முறை நீளம் தாண்டுதலிலும் (டிரிபிள் ஜம்ப்) கால்பதிப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வருமாறு:-
ஆண்கள்: அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), எம்.பி.ஜாபிர் (400 மீட்டர் தடை ஓட்டம்), ஸ்ரீசங்கர், முகமது அனீஸ் யாஹியா, ெஜஸ்வின் அட்ரின் (மூவரும் நீளம் தாண்டுதல்), அப்துல்லா அபூபக்கர், பிரவீன் சித்ரவேல், எல்தோஷ் பால் (டிரிபிள் ஜம்ப்), தஜிந்தர்பால் சிங் (குண்டு எறிதல்), நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் (ஈட்டி எறிதல்), சந்தீப்குமார் (20 கிலோமீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், நோவா நிர்மல், முகமது அஜ்மல், நாகநாதன் பாண்டி, ராஜேஷ் ரமேஷ், முகமது அனாஸ் யாஹியா (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்).
பெண்கள்: எஸ்.தனலட்சுமி (200 மீட்டர் ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பிரியங்கா கோஸ்வாமி (20 கிலோமீட்டர் நடைபந்தயம்).