< Back
பிற விளையாட்டு
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 200 மீட்டர் ஓட்டத்திலும் அமெரிக்க வீரர் நோவா தங்கப்பதக்கம் வென்றார்
பிற விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 200 மீட்டர் ஓட்டத்திலும் அமெரிக்க வீரர் நோவா தங்கப்பதக்கம் வென்றார்

தினத்தந்தி
|
27 Aug 2023 3:11 AM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

புடாபெஸ்ட்,

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதி சுற்றில் 9 பேர் பங்கேற்றனர். விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் 19.52 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். அவர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 3-வது முறையாக தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 26 வயதான நோவா லைல்ஸ் 5 நாட்களுக்கு முன்பு நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று உலகின் அதிவேக மனிதர் என்று தன்னை நிரூபித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உலக தடகள போட்டியில் 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் ஒருசேர தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை நோவா லைல்ஸ் பெற்றார். 2015-ம் ஆண்டில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 3-வது முறையாக இத்தகைய சாதனையை படைத்து இருந்தார்.

மற்றொரு அமெரிக்க வீரரான 19 வயது எரியோன் நைட்டான் 19.75 வினாடியில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், போஸ்ட்வானா நாட்டை சேர்ந்த 20 வயது வீரர் லெட்சைல் டிபொகோ 19.81 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர். லெட்சைல் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற இங்கிலாந்து வீரர் ஜார்னெல் ஹூக்ஸ் (20.02 வினாடி) 4-வது இடத்துக்கும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க வீரர் கென்னி பெட்னாரிக் (20.07 வினாடி) 5-வது இடத்துக்கும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கனடா வீரர் ஆந்த்ரே டி கிராஸ்சி (20.14 வினாடி) 6-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.

வெற்றிக்கு பிறகு நோவா லைல்ஸ் கூறுகையில், 'பல பேர் செய்யாத ஒன்றை நான் செய்து இருப்பதை அறிந்து மிகவும் சிறப்பாக உணர்கிறேன். மற்றவர்களிடம் இருந்து என்னை வித்தியாசமானவனாக காட்ட வேண்டும் என்று விரும்பினேன். இரட்டை சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதும் எனது நோக்கமாக இருந்தது. எனது எண்ணம் நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் 9 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் எதிர்பார்த்தபடி 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான ஜமைக்கா வீராங்கனை ஷெரிகா ஜாக்சன் 21.41 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை மீண்டும் சொந்தமாக்கினார். அவர் கடந்த ஆண்டும் தங்கப்பதக்கத்தை வென்று இருந்தார். அமெரிக்க வீராங்கனை காப்ரியல் தாமஸ் 21.81 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், 4 நாட்களுக்கு முன்பு நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் 21.92 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' (மும்முறை தாண்டுதல்) போட்டியில் உலக சாதனையாளரான வெனிசுலா வீராங்கனை யுலிமார் ரோஜாஸ் தனது கடைசி முயற்சியில் 15.08 மீட்டர் தூரம் தாண்டி சரிவில் இருந்து மீண்டு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான 27 வயது யுலிமார் ரோஜாஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக 4-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். உக்ரைன் வீராங்கனை மரினா பெக் ரோமன்சுக் 15 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும், கியூபா வீராங்கனை லியானிஸ் பெரிஸ் ஹெர்னாண்டஸ் 14.96 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.

நடப்பு தொடரில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் அமெரிக்காவே தனது ஆதிக்கத்தை நீட்டிக்கும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்