உலக தடகள சாம்பியன்ஷிப்: தொடர் ஓட்டம் பிரிவில் 5ம் இடம் பிடித்த இந்தியா
|உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர் ஓட்டம் பிரிவில் இந்திய அணி 5ம் இடம்பிடித்தது.
புடாபெஸ்ட்,
19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது.
இதில், ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்ட பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் தகுதிச்சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்றன.
இந்நிலையில், ஆண்கள் தொடர் ஓட்டம் இறுதிப்போட்டியில் இந்தியா 5ம் இடம் பிடித்தது. இந்திய அணியில் முகமது அனஸ் யஹியா, அமொஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வரியத்தொடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்திய அணி 2 நிமிடம் 59.92 விநாடிகளில் அடைந்து 5ம் இடம்பிடித்தது. அதேவேளை, இலக்கை 2 நிமிடம் 57.31 விநாடிகளில் அடைந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து தங்கப்பதங்கத்தையும், 2 நிமிடம் 58.45 விநாடிகளில் அடைந்து பிரான்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும், 2 நிமிடம் 58.71 விநாடிகளில் அடைந்து இங்கிலாந்து மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தையும் வெற்றது. 2 நிமிடம் 59.34 விநாடிகளில் அடைந்த ஜமைக்கா 4ம் இடத்தையும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தகுதிச்சுற்றுப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்திய அணி 2 நிமிடம் 59.05 விநாடிகளில் அடைந்து 2ம் இடம்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.