< Back
பிற விளையாட்டு
வெற்றி பெற்றால் தானாகவே தரவரிசையில் ஏற்றம் ஏற்படும் - இளம் பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென்
பிற விளையாட்டு

'வெற்றி பெற்றால் தானாகவே தரவரிசையில் ஏற்றம் ஏற்படும்' - இளம் பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென்

தினத்தந்தி
|
14 Aug 2023 1:55 AM IST

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புவதாக லக்ஷயா சென் தெரிவித்தார்.

கவுகாத்தி,

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

"உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. கடந்த பல போட்டிகளில் நான் விளையாடிய விதம் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உலக போட்டிக்காக நன்றாக தயாராகி இருக்கிறேன். கடந்த பல்வேறு போட்டிகளில் எனது ஆட்ட 'பார்ம்' நன்றாக இருந்தது. ஆனாலும் இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்வதுடன் முன்னேற்றமும் காண வேண்டியது அவசியமானதாகும். இந்த போட்டிக்கு தயாராக விளையாடிய பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அது எனக்கு நிறையை தன்னம்பிக்கையை கொடுக்கும். வரும் வாரத்திலும் நல்ல பயிற்சியை எதிர்நோக்குகிறேன். அத்துடன் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன். ஆனால் தற்போது எனது முதல் முன்னுரிமை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தான். அது முடிந்த பிறகு தான் ஆசிய விளையாட்டு போட்டி குறித்து கவனம் செலுத்துவேன்.

நான் விரைவில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். பின்னர் ஒலிம்பிக் தகுதி சுற்று முடிவைடையும் போது 'டாப்-5' இடங்களுக்குள் வருவதே எனது நோக்கமாகும். அதேநேரத்தில் நிறைய போட்டிகள் வர இருக்கின்றன. எனவே வரும் பெரிய போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன். வெற்றி பெற்றால் தானாகவே தரவரிசையில் ஏற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார். உத்தரகாண்டை சேர்ந்த 21 வயதான லக்ஷயா சென் தற்போது உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கிறார். அவர் 2021-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

மேலும் செய்திகள்