ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து விளையாடுவேன் - தோல்விக்கு பிறகு சிந்து பதிவு
|பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
பாரீஸ்,
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹி பிங் ஜியாவிடம் தோல்வியடைந்தார். முந்தைய இரு ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்றிருந்த சிந்து மீண்டும் பதக்கம் வெல்வாரா? என்ற ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் பி.வி.சிந்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
'2024 பாரீஸ், ஒரு அழகான பயணம். ஆனால் கடினமான இழப்பு. இந்த இழப்பு எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒன்றாகும். இதை ஏற்றுக்கொள்ள சிறிது காலம் பிடிக்கும். ஆனால் வாழ்க்கையில் முன்னேறி செல்லும்போது, நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று எனக்குத் தெரியும். 2024 பாரீசுக்கான பயணம் ஒரு போராக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட காயங்களால் நீண்ட நாட்கள் விளையாடாமல் வெளியே இருக்க வேண்டி இருந்தது. இந்த சவால்களை எல்லாம் தாண்டி நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது பெருமையாக இருந்தது.
களத்தில் இந்த அளவுக்கு போட்டியிட்டதையும், அதைவிட முக்கியமாக அடுத்த தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதையும் உண்மையிலேயே அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கடினமான தருணத்தில் என்னை இயல்பான நிலையில் வைத்திருக்க உங்களது ஆதரவும், குறுந்தகவல்களும் உறுதுணையாக இருக்கின்றன. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக நானும், எனது அணியினரும் ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்தோம். அதனால் எந்த வித வருத்தமும் இல்லை.
எனது எதிர்காலம் குறித்து நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, தொடர்ந்து விளையாடுவேன். எனது உடலுக்கு குறிப்பாக மனதுக்கு ஓய்வு அவசியமாகும். இருப்பினும், நான் மிகவும் விரும்பும் பேட்மிண்டனை விளையாடுவதில் அதிக மகிழ்ச்சியைக் காண, முன்னோக்கி செல்லும் பயணத்தை கவனமாக திட்டமிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.