< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்கில் கோப்பை யாருக்கு ? : இறுதிப்போட்டியில் புனே-அரியானா இன்று மோதல்
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்கில் கோப்பை யாருக்கு ? : இறுதிப்போட்டியில் புனே-அரியானா இன்று மோதல்

தினத்தந்தி
|
1 March 2024 7:21 AM IST

அஸ்லாம் முஸ்தபா தலைமையிலான புனேரி பால்டன், ஜெய்தீப் தாஹியா தலைமையிலான அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

ஐதராபாத்,

10-வது புரோ கபடி லீக் போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த டிசம்பர் 2-ந் தேதி ஆமதாபாத்தில் தொடங்கிய இந்த கபடி திருவிழாவில் 12 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன் (96 புள்ளி), நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92 புள்ளி) ஆகிய அணிகள் முறையே முதல் 2 இடங்களை பிடித்து நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறின. தபாங் டெல்லி (79 புள்ளி), குஜராத் ஜெயன்ட்ஸ் (70 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (70 புள்ளி), பாட்னா பைரட்ஸ் (69 புள்ளி) ஆகிய அணிகள் முறையே 3 முதல் 6 இடங்களை சொந்தமாக்கி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தன.

வெளியேற்றுதல் சுற்றில் (பிளே-ஆப்) பாட்னா பைரட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரைஇறுதிக்கு வந்தன. இதனையடுத்து முதலாவது அரைஇறுதியில் புனேரி பால்டன் 37-21 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது அரைஇறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் 31-27 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து முதல்முறையாக இறுதிப்போட்டியை அடைந்துள்ளது.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி ஐதராபாத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் அஸ்லாம் முஸ்தபா தலைமையிலான புனேரி பால்டன், ஜெய்தீப் தாஹியா தலைமையிலான அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

மேலும் செய்திகள்