< Back
பிற விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விதிமுறைகள் என்ன?
பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விதிமுறைகள் என்ன?

தினத்தந்தி
|
27 July 2022 5:27 AM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* 'ஸ்விஸ்' விதிமுறைப்படி நடக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவில், சமபலத்துடன் அதிக புள்ளிகளை பெற்றுள்ள அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் வகையில் அட்டவணை உருவாக்கப்படும்.

* ஒவ்வொரு ஆட்டத்திற்கான அணியில் மொத்தம் 5 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒருவர் மாற்று வீரராக (ரிசர்வ்) இருப்பார். அணியின் கேப்டன் ஆடும் வீரராக இருக்க வேண்டும்.

* முதல், 2-வது, 3-வது, 4-வது செஸ் போர்டுகளில் யார்-யார் ஆடுவார்கள் ? என்பதை அணி நிர்வாகம் வரிசைப்படுத்தி முன்கூட்டியே எழுதி கொடுத்து விட வேண்டும். கடைசி நேரத்தில் வரிசையை மாற்ற முடியாது.

* ஆட்டத்தில் முதல் போர்டில் ஆடும் வீரருக்கு ஓய்வு கொடுத்தால், 2-வது வரிசை வீரர் முதல் போர்டில் ஆடுவார். அந்த மாதிரியான சூழலில் மாற்று வீரர் 4-வது போர்டில் தான் விளையாட முடியும். எந்த காரணத்தை கொண்டும் மாற்று வீரர் முதல் 3 போர்டுகளில் ஆட வைக்கப்படமாட்டார்.

* வெற்றிக்கு ஒரு புள்ளி, டிராவுக்கு அரை புள்ளி வழங்கப்படும். தோல்விக்கு புள்ளி கிடையாது. 4 வீரர்கள் ஆடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவதுடன், அந்த அணிக்கு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும். ஆட்டம் 2-2, 1½-1½ என்ற வீதம் டிராவில் முடிந்தால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.

* ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒரு நகர்வுக்கு 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும்.

* 30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக பரஸ்பரம் அடிப்படையில் டிராவில் முடித்துக் கொள்ள முடியாது.

11 சுற்றுகள் முடிவில் அதிக புள்ளி சேர்க்கும் அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். ஒருவேளை இரு அணிகள் ஒரே புள்ளியில் இருந்தால் ஆட்டங்களில் அதிக வெற்றி மற்றும் தங்களிடம் வீழ்ந்த அணிகளின் வலிமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு சாம்பியன் அணி தீர்மானிக்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெள்ளிப்பதக்கமும், 3-வது இடத்தை பெறும் அணிக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்படும்.

இது தவிர டாப்-3 தனிநபருக்கும் பதக்கங்கள் உண்டு. இதற்கு ஒரே வரிசை போர்டில் விளையாடும் வீரர்களின் செயல்பாடு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். இந்த பதக்கத்தை பெற ஒரு வீரர் குறைந்தது 8 ஆட்டங்களில் ஆட வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்