உலக பேட்மிண்டன் போட்டி: முன்னாள் சாம்பியன் மோமோட்டாவுக்கு அதிர்ச்சி அளித்தார் பிரனாய்
|உலக பேட்மிண்டன் போட்டியில் முன்னாள் சாம்பியன் மோமோட்டாவை வீழ்த்தி இந்திய வீரர் பிரனாய் 3-வது சுற்றை எட்டினார்.
லக்ஷயா சென் வெற்றி
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்ஷயா சென், ஸ்பெயினின் லூயிஸ் என்ரிக் பெனால்வெரை சந்தித்தார்.
72 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் லக்ஷயா சென் 21-17, 21-10 என்ற நேர்செட்டில் லூயிஸ் என்ரிக் பெனால்வெரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-17, 21-16 என்ற நேர்செட்டில் 2 முறை உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான கென்டோ மோமோட்டாவுக்கு (ஜப்பான்) அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெறும் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் லக்ஷயா சென்-எச்.எஸ்.பிரனாய் மோதுகிறார்கள்.
ஸ்ரீகாந்த் தோல்வி
மற்றொரு ஆட்டத்தில் 2021-ம் ஆண்டு உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், தரவரிசையில் 13-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 9-21, 17-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜாவோ ஜன் பெங்கிடம் தோற்று வெளியேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 21-17, 21-16 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் கிம் அஸ்ட்ருப்-அன்டெர்ஸ் காருப் ரஸ்முஸ்சென் இணையை விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-8, 21-10 என்ற நேர்செட்டில் கவுதமாலாவின் சோலிஸ் ஜோனதன்-அனிபல் மர்ரோயின் ஜோடியை சாய்த்தது.
இந்திய ஜோடிகள் ஏமாற்றம்
பெண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் அஸ்வினி -சிக்கி ரெட்டி இணை 15-21, 10-21 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் கிவிங் சென்-ஜியா யி பேன் ஜோடியிடம் வீழ்ந்து நடையை கட்டியது.
இதே போல் இந்தியாவின் திரீஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் கூட்டணி 8-21, 17-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் பியர்லி டான்-தினாக் முரளி ஜோடியிடமும், பூஜா-சஞ்சனா இணை 15-21, 7-21 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் லீ சோ ஹீ-சின் செங் சான் ஜோடியிடமும், அஸ்வின் பட்-ஷிகா கவுதம் இணை 5-21, 21-18, 13-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் கிம் சோ யின்-கோங் ஹீ யோங் ஜோடியிடமும் பணிந்தது.