கைப்பந்து லீக்: அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது சென்னை அணி
|3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
சென்னை,
3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 9 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை சந்திக்க வேண்டும். இதன்படி நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன.
ஒரு ஆட்டத்தில் சென்னை பிளிட்ஸ் அணி, கோழிக்கோடு ஹீரோசுடன் மோதியது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் ஆடிய சென்னை பிளிட்ஸ் அணி 13-15, 13-15, 12-15 என்ற நேர் செட்டில் சரண் அடைந்தது. 4-வது தோல்வியை தழுவிய சென்னை அணி (8 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை (சூப்பர்5) பறிகொடுத்து வெளியேறியது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி டூபான்ஸ் 15-11, 16-14, 15-12 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியன் ஆமதாபாத்தை சாய்த்தது.
லீக் சுற்று முடிவில் முதல் 5 இடங்களை பிடித்த கோழிக்கோடு ஹீரோஸ் (12 புள்ளி), டெல்லி டூபான்ஸ் (12 புள்ளி), ஆமதாபாத் டிபென்டர்ஸ் (10 புள்ளி), பெங்களூரு டார்போஸ் (10 புள்ளி), மும்பை மீட்டியார்ஸ் (10 புள்ளி) ஆகிய அணிகள் சூப்பர் 5 சுற்றுக்குள் நுழைந்தன.
இன்று சூப்பர்5 சுற்று தொடங்குகிறது. இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு டார்படோஸ்- டெல்லி டூபான்ஸ் (மாலை 6.30 மணி), கோழிக்கோடு ஹீரோஸ்- மும்பை மீட்டியார்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.