ஊக்க மருந்து விதிமுறையை மீறியதாக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் இடைநீக்கம்
|விதிமுறையை மீறியதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் ஹிமா தாஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதுடெல்லி,
வருகிற 23-ந் தேதி சீனாவில் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய தடகள அணியில், இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஹிமா தாஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
இந்த நிலையில் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்துவதற்கு வசதியாக தான் இருக்கும் இடத்தை ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு தெரிவிக்காமல் விதிமுறையை மீறியதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் ஹிமா தாஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 12 மாதங்களில் தனது இருப்பிடம் குறித்த தகவலை 3 முறை அளிக்க தவறியதால் அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதனால் அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அசாமை சேர்ந்த 23 வயதான ஹிமா தாஸ் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், 400 மீட்டர் கலப்பு அணிகள் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.