அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்; பிவி சிந்து, லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்...!!
|அமெரிக்க ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் பிவி சிந்து மற்றும் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
கவுன்சில் பிளப்ஸ்சில்,
அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீன தைபே வீராங்கனையான சுங் சுயோ யுன் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிவி சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட்களில் சுங் சுயோ யுனை தோற்கடித்து காலிறுதி சுற்றிற்கு முன்னேறி உள்ளார். பேட்மிண்டன் தரவரிசையில் 12-வது நிலையில் உள்ள பிவி சிந்து இந்த போட்டியில் 37 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.
இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான பிவி சிந்து தனது காலிறுதி ஆட்டத்தில் சீனாவைச் சேர்ந்த காவ் பாங் ஜீ-ஐ எதிர்கொள்கிறார்.
அதே வேளையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் செக் குடியரசின் ஜான் லௌடா உடன் மோதினார்.பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 21-8, 23-21 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று லக்ஷயா சென் காலிறுதி சுற்றிற்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில், காமன்வெல்த் விளையாட்டு 2022 சாம்பியனான லக்ஷயா சென் சகநாட்டவரான சங்கர் முத்துசாமி உடன் மோத உள்ளார்.