அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: டெல்லி, சென்னை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
|41 புள்ளிகள் பெற்றுள்ள சென்னை அணி அரைஇறுதியை உறுதி செய்தது.
புனே,
6 அணிகள் இடையிலான 4-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் தபாங் டெல்லி, நடப்பு சாம்பியன் சென்னை லயன்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 9-6 என்ற கணக்கில் சென்னை லயன்சை சாய்த்தது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டெல்லி அணி வீரர் சத்யன் 11-10, 11-3, 11-6 என்ற நேர்செட்டில் சென்னை அணியின் சரத் கமலுக்கு அதிர்ச்சி அளித்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை வீராங்கனை யாங்ஸி லியு 11-8, 8-11, 11-8 என்ற செட் கணக்கில் ஸ்ரீஜா அகுலாவை வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் பிரிவில் டெல்லி அணியின் சத்யன்-பார்போரா ஜோடி 11,7, 11-6, 7-11 என்ற செட் கணக்கில் சரத் கமல்-யாங் ஸி இணையை வென்றது.
மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெனடிக்ட் டுடாவும், (சென்னை), பெண்கள் ஒற்றையர் பிரிவில் பார்போராவும்(டெல்லி) வெற்றி கண்டனர். இந்த வெற்றியின் மூலம் மொத்தம் 42 புள்ளிகள் குவித்துள்ள டெல்லி அணி அரைஇறுதிக்கு முன்னேறியது. 41 புள்ளிகள் பெற்றுள்ள சென்னை அணியும் அரைஇறுதியை உறுதி செய்தது.