< Back
பிற விளையாட்டு
சென்னையில் இன்று டேபிள் டென்னிஸ் லீக் போட்டி தொடக்கம்
பிற விளையாட்டு

சென்னையில் இன்று டேபிள் டென்னிஸ் லீக் போட்டி தொடக்கம்

தினத்தந்தி
|
22 Aug 2024 12:07 PM IST

தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போன்று டேபிள் டென்னிஸ் லீக் போட்டித் தொடர் நடத்தப்படுகிறது. அவ்வகையில், ஐந்தாவது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யு.டி.டி.) லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 7-ந் தேதி வரை 17 நாட்கள் போட்டிகள் நடைபெறுகின்றன.

இப்போட்டி தொடரில் நடப்பு சாம்பியன் கோவா சேலஞ்சர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி, பெங்களூரு ஸ்மாஷர்ஸ், புனேரி பால்டன், யு மும்பா, புதிய அணிகளான ஆமதாபாத் எஸ்.ஜி.பைப்பர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியிலும் 2 வெளிநாட்டினர் உள்பட 6 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். சென்னை லயன்ஸ் அணியில் சரத் கமல் அபிநந்த், ஜூல்ஸ் ரோலண்ட் (பிரான்ஸ்), மவுமா தாஸ், போய்மன்டீ பைஸ்யா, சகுரா மோரி (ஜப்பான்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடும். ஒவ்வொரு லீக் ஆட்டத்திலும் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர், மாற்று ஆண்கள் ஒற்றையர், மாற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைகின்றன. 5-ம் தேதி முதல் அரையிறுதி ஆட்டமும், 6-ம் தேதி இரண்டாவது அரையிறுதி ஆட்டமும் நடைபெறுகிறது. செப்டம்பர் 7-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்