பாலியல் வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்டு; மதிக்கிறோம், போராட்டம் தொடரும்: மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு
|இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் வழக்கை முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்டு முடிவை ஏற்கிறோம் என்றும் போராட்டம் தொடரும் என்றும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்து உள்ளனர்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுபற்றி தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.
இதில், மல்யுத்த வீராங்கனைகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோர்ட்டில் கூறும்போது, நடந்து வரும் விசாரணையானது, ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதி கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டும் என கூறினார். இதனை ஏற்க நீதிபதி சந்திரசூட் மறுத்து விட்டார்.
அதன்பின்பு, சிறப்பு வேண்டுகோள்களுடன் நீங்கள் வந்தீர்கள். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வேண்டும். புகார்தாரர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கேட்டீர்கள். இந்த இரண்டு விசயங்களும் கேட்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளன.
2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் புகார் அளித்த 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என கூறி அந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டு உள்ளது. உங்களுக்கு வேறு ஏதேனும் குறைகள் இருப்பின், நீங்கள் ஐகோர்ட்டு அல்லது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்ற அமர்வு தெரிவித்து உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இதுபற்றி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். போராட்டம் தொடரும். அனைத்து வாய்ப்புகளையும் வெளிப்படையாகவே நாங்கள் வைத்திருக்கிறோம். மூத்த வீரர்களிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி முடிவு செய்வோம் என கூறியுள்ளனர்.