கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்ற பாரா ஒலிம்பிக்
|பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்றது.
பாரீஸ்,
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று வீல்சேர் கூடைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் அமெரிக்கா 73-69 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து தொடர்ந்து 3-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற பாரீஸ், பாரா ஒலிம்பிக் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 18வது இடத்தை பிடித்தது. இதையடுத்து நேற்று இரவு பாரீசில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சி, நடனம், சாகசங்களுடன் நிறைவு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் வீரர், வீராங்கனை அணிவகுப்பில் இந்திய அணிக்கு வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர். பின்னர் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு, ஒலிம்பிக் கொடி 2028-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கை நடத்தும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது.