8 அணிகள் பங்கேற்கும் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
|8 அணிகள் பங்கேற்கும் ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.
சென்னை,
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் மாவட்ட 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது.
மறைந்த சர்வதேச கைப்பந்து வீரர் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவாக நடந்தப்படும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம்., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சுங்க இலாகா, தமிழ்நாடு போலீஸ், இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., வருமான வரி, டி.ஜி.வைஷ்ணவா ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு 'ரவுண்ட் ராபின் லீக்' முறையில் மோதுகின்றன.
லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு கோப்பையுடன், ரொக்கப்பரிசும் வழங்கப்படும். மொத்தம் ரூ.5 லட்சம் பரிசாக அளிக்கப்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மன் எஸ்.என். ஜெயமுருகன் தலைமையிலான கமிட்டியினர் செய்து வருகின்றனர். இந்த தகவலை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தெரிவித்துள்ளார்.