மராட்டிய ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் ராம்குமார், பாம்ப்ரி வெற்றி
|மராட்டிய ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் ராம்குமார், பாம்ப்ரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது. தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான இதில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஒற்றையர் பிரிவில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 17-ம் நிலை வீரருமான குரோஷியாவின் மரின் சிலிச்சுக்கு பை சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட இருக்கிறார். இதே போல் கடந்த ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான எமில் ரூசுவோரி (பின்லாந்து), போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து), செபாஸ்டியன் பேஸ் (அர்ஜென்டினா) ஆகியோரும் நேரடியாக 2-வது சுற்றில் கால்பதிக்கிறார்கள்.
இரட்டையர் பிரிவில் கடந்த ஆண்டு இந்தியாவின் ரோகன் போபண்ணா- ராம்குமார் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இவர்கள் இந்த முறை வெவ்வேறு ஜோடியுடன் களம் காணுகிறார்கள். அதுவும் முதல் சுற்றிலேயே அவர்கள் நேருக்கு நேர் மோதும் வகையில் அட்டவணை அமைந்துள்ளது. அதாவது போபண்ணா- ஜான்ட்ஸ்கல்ப் ஜோடி, ராம்குமார்- மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ் வரேலா (மெக்சிகோ) இணையுடன் மல்லுக்கட்டுகிறது. இந்தியாவின் வளரும் நட்சத்திரம் 15 வயதான மனாஸ் தாமேவுக்கு பிரதான சுற்றில் ஆடும் வகையில் வைல்டு கார்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது. புனேயில் பிறந்தவரான அவர் முதல் சுற்றில்உலக தரவரிசையில் 113-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் மைக்கேல் மோவை எதிர்கொள்கிறார்.
இதற்கிடையே, நேற்று நடந்த தகுதி சுற்றின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, ராம்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். பாம்ப்ரி 6-2, 6-2 என்ற நேர் செட்டில் டியாகோ ஹிடால்கோவையும் (ஈகுவடார்), சென்னையைச் சேர்ந்த ராம்குமார் சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஒட்டோ விர்டானேயும் (பின்லாந்து) தோற்கடித்தனர். மற்ற இந்திய வீரர்கள் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சித்தார்த் ரவாத், ஆதித்யா பால்சேகர் ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.
யுகி பாம்ப்ரி, ராம்குமார் ஆகியோர் இன்று தங்களது தகுதி சுற்றின் 2-வது ரவுண்டிலும் வெற்றி பெற்றால் பிரதான சுற்றை அடைவார்கள்.