தமிழ்நாடு கைப்பந்து லீக்: கடலூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!
|தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி சென்னை மயிலாப்பூரில் நடந்து வருகிறது.
சென்னை,
6 அணிகள் இடையிலான முதலாவது தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி (டி.என்.வி.எல்.) சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தது.
மாலை நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை ராக்ஸ்டார்ஸ்-விருதுநகர் கிங் மேக்கர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் விருதுநகர் கிங் மேக்கர்ஸ் 21-16, 21-20, 21-14, 15-21, 20-21 என்ற செட் கணக்கில் சென்னை ராக்ஸ்டார்சை வீழ்த்தி 3-வது வெற்றியை தனதாக்கியது. 3 ஆட்டங்களில் வென்றுள்ள சென்னை அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.
மற்றொரு லீக் ஆட்டத்தில் குமரி போனிக்ஸ் 21-18, 16-21, 21-17, 21-18, 21-17 என்ற செட் கணக்கில் கிருஷ்ணகிரி புல்சை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. கிருஷ்ணகிரி அணிக்கு இது 3-வது தோல்வியாகும். இதையடுத்து முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ள கடலூர் வித் அஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சென்னை ராக்ஸ்டார்ஸ்-விருதுநகர் கிங் மேக்கர்ஸ் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கடலூர் அணியை சந்திக்கும்.