தமிழ்நாடு கைப்பந்து லீக்: கிருஷ்ணகிரி புல்ஸை வீழ்த்தியது சென்னை ராக்ஸ்டார்ஸ்
|சென்னை ராக்ஸ்டார்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
சென்னை,
தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 6 அணிகள் இடையிலான முதலாவது தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி (டி.என்.வி.எல்.) சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை ராக்ஸ்டார்ஸ்-கிருஷ்ணகிரி புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை ராக்ஸ்டார்ஸ் 21-15, 14-21, 21-12, 21-17, 21-17 என்ற செட் கணக்கில் கிருஷ்ணகிரி புல்சை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இது கிருஷ்ணகிரிக்கு முதல் தோல்வியாகும். சென்னை வீரர் பிரின்ஸ் சிறந்த வீரருக்கான ரூ.5 ஆயிரத்தை தட்டிச் சென்றார்.
மற்றொரு ஆட்டத்தில் கடலூர் வித் அஸ் அணி 17-21, 21-16, 21-15, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் குமரி போனிக்சை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய குமரி அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.
இந்த போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் குமரி போனிக்ஸ்-விருதுநகர் கிங் மேக்கர்ஸ் (மாலை 5.30 மணி), சென்னை ராக்ஸ்டார்ஸ்-விழுப்புரம் சூப்பர் கிங்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.