தமிழக தேசிய மாணவர் படை துப்பாக்கி சுடும் போட்டியில் 16 தங்கப் பதக்கங்களை வென்றது
|தமிழக தேசிய மாணவர் படை துப்பாக்கி சுடும் போட்டியில் 16 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
சென்னை,
திருச்சி ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், தனிநபர் மற்றும் குழு பிரிவுகளில் 16 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் பகுதிகளை உள்ளடக்கிய தேசிய மாணவர் படை (என்.சி.சி.) இயக்குனரகம் புதிய சாதனை படைத்து உள்ளது.
இந்த வெற்றிகளை பெற்ற தேசிய மாணவர் படை வீரர்கள், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து கடந்த மே மாதத்தில் தேர்வு செய்யப்பட்டு, போட்டிக்கு முன்னதாக 2 மாதங்களுக்கு முறையான துப்பாக்கி சுடும் பயிற்சியின் பல்வேறு நிலைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வெற்றியாளர்கள் தென் மண்டலம் மற்றும் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் அணியை வழிநடத்துவார்கள். தமிழக இயக்குனரகத்தின் மற்றொரு அணி ஏற்கனவே கடந்த மாதம் சண்டிகரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான இயக்குனரகங்களுக்கு இடையேயான விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தைப் பெற்றிருந்தது என்று பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.