மாநில கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி
|70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி வெற்றி பெற்றது
சென்னை:
தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 49 அணிகளும் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்படுகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம். அணி 23-25, 25-21, 27-25 என்ற செட் கணக்கில் போராடி இந்தியன் வங்கியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் சுங்க இலாகா அணி 25-23, 25-23 என்ற நேர்செட்டில் வருமான வரியை சாய்த்தது.
பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-13, 25-12 என்ற நேர்செட்டில் பனிமலரை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் 23-25, 25-23, 25-20 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியையும், டாக்டர் சிவந்தி பவுண்டேசன் 25-11, 25-23 என்ற நேர்செட்டில் யாதவா கிளப்பையும், ஜி.கே.எம். 'பி' அணி 25-13, 26-24 என்ற நேர்செட்டில் ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப்பையும், ஐ.சி.எப். 25-16, 25-12 என்ற நேர்செட்டில் பி.ஆர்.நடராஜன் கிளப்பையும், நடப்பு சாம்பியன் டாக்டர் சிவந்தி கிளப் 25-10, 25-12 என்ற நேர்செட்டில் பனிமலரையும் தோற்கடித்தன.