< Back
பிற விளையாட்டு
மாநில கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம்., ஐ.சி.எப். அணிகள் சாம்பியன்
பிற விளையாட்டு

மாநில கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம்., ஐ.சி.எப். அணிகள் 'சாம்பியன்'

தினத்தந்தி
|
17 Sept 2022 6:52 AM IST

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 6 நாட்கள் நடந்தது

சென்னை:

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 6 நாட்கள் நடந்தது. இதில் நேற்று மாலை நடந்த பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஐ.சி.எப்.(சென்னை)-பி.கே.ஆர். (கோபி) அணிகள் மோதின.

கலக்கலாக ஆடிய ஐ.சி.எப். 25-18, 25-19, 25-16 என்ற நேர்செட்டில் பி.கே.ஆர். அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 25-10, 25-16 என்ற நேர்செட்டில் பாரதியார் அணியை (ஆத்தூர்) தோற்கடித்தது.

ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம்., தமிழ்நாடு போலீஸ் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 25-21, 26-24, 25-21 என்ற நேர்செட்டில் போலீஸ் அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. இதன் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 25-19, 25-22 என்ற நேர்செட்டில் இந்தியன் வங்கியை சாய்த்து 3-வது இடத்தை பெற்றது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு எஸ்.என்.ஜெ. பரிசு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார். முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசாக அளிக்கப்பட்டது.

விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் டாக்டர் பொன் கவுதம் சிகாமணி எம்.பி., பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, எஸ்.என்.ஜெ.குழும நிர்வாக இயக்குனர் எஸ்.என்.ஜெயமுருகன், பொருளாளர் செல்வகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்