மாநில கைப்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் போலீஸ்-எஸ்.ஆர்.எம்.
|நடப்பு சாம்பியன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை வீழ்த்தி எஸ்.ஆர்.எம். அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
சென்னை,
தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தது. ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-22, 20-25, 20-25, 25-22, 15-12 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம். அணி 25-18, 25-14, 25-23 என்ற நேர்செட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் தமிழ்நாடு போலீஸ்-எஸ்.ஆர்.எம். அணிகள் மோதுகின்றன.
பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டத்தில் பி.கே.ஆர். (கோபி) அணி 23-25, 25-12, 26-24, 25-13 என்ற செட் கணக்கில் பாரதியாரை (ஆத்தூர்) தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டியது. ஐ.சி.எப். அணி25-23, 21-25, 25-22, 25-22 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம். அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் பி.கே.ஆர்.-ஐ.சி.எப். அணிகள் சந்திக்கின்றன. இன்று மாலை 4 மணிக்கு இறுதிப்போட்டி மற்றும் அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.