மாநில கைப்பந்து போட்டி: டி.பி.ஜெயின் அணி 'சாம்பியன்'
|மாநில கைப்பந்து போட்டியில் டி.பி.ஜெயின் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. சார்பில் கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி அதன் வளாகத்தில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 18 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் கலந்து கொண்டன.
ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் டி.பி.ஜெயின் அணி 25-14, 25-16, 25-20 என்ற நேர்செட்டில் லயோலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நசரேத் அணி 25-16, 25-15, 25-13 என்ற நேர்செட்டில் ஸ்டெல்லா மேரிஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். ஐ.ஐ.டி. பதிவாளர் ஜானே பிரசாத், அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சந்திரசேகர், விளையாட்டு அதிகாரிகள் எடின், ராஜூ, ஆலோசகர் அருள் பிரகாஷ் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.