டைமண்ட் லீக் தடகளம்: நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் வெண்கலம் வென்றார்
|டைமண்ட் லீக் தடகள போட்டி நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் வெண்கலம் வென்றார்.
சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான பாரீஸ் டைமண்ட் லீக் போட்டி பிரான்சில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் பங்கேற்ற இந்திய வீரர் எம்.ஸ்ரீசங்கர் தனது 3-வது முயற்சியில் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். அவர் தனது 4-வது முயற்சியில் 8.13 மீட்டர் தூரம் தாண்டியது பவுல் ஆனதால் வீணானது. ஒலிம்பிக் மற்றும் டைமண்ட் லீக் சாம்பியனான கிரீஸ் வீரர் மில்தியாடிஸ் டெண்டாக்லோ 8.13 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தையும், சுவிட்சர்லாந்து வீரர் சிமோன் ஹாம்மர் 8.11 மீட்டர் தூரம் குதித்து வெள்ளிப்பதக்கத்தையும் தனதாக்கினர்.
இதன் மூலம் கேரளாவை சேர்ந்த 24 வயதான ஸ்ரீசங்கர் டைமண்ட் லீக் போட்டியில் பதக்கம் வென்ற 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை சொந்தமாக்கினார். இதற்கு முன்பு இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா, ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்த போட்டியில் பதக்கம் வென்றுள்ளனர். 2-வது முறையாக டைமண்ட் லீக் போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீசங்கர் முதல்முறையாக பதக்கத்தை முத்தமிட்டு இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு நடந்த மொனாக்கோ சுற்று போட்டியில் 6-வது இடமே பெற்று இருந்தார். ஸ்ரீசங்கர் தனது சிறந்த செயல்பாடாக 8.36 மீட்டர் தூரம் வரை தாண்டி இருக்கிறார். அதனை அவர் இந்த போட்டியில் செய்து இருந்தால் தங்கத்தை வென்று இருக்கலாம்.