ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் தடகள வீரர் அம்லான் போர்ஹோகைன் இருப்பார்: இந்திய தடகள சம்மேளன தலைவர்
|ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய தடகள அணியில் 65 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றிருக்கும் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டது.
புதுடெல்லி,
1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் வரும் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 பந்தயங்கள் அரங்கேறுகிறது.
இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய தடகள அணியில் 65 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றிருக்கும் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டது. இதில் முன்னணி ஓட்டப்பந்தய வீரர் அம்லான் போர்ஹோகைன் பெயர் இடம் பெறவில்லை. அவர் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர் ஆவார். இந்த நிலையில் அவர் ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று இந்திய தடகள சம்மேளன தலைவர் அடில் சுமரிவாலா நேற்று தெரிவித்தார்.