ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜென்ஜிரா ஸ்டேடல்மான் ஆகியோர் விளையாடினர்.
31 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-10, 21-14 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 2023-ம் ஆண்டுக்கான சுவிஸ் ஓபன் போட்டி ஒன்றில் ஜென்ஜிராவை சிந்து வீழ்த்தி இருந்த நிலையில், இந்த மாதத்தில் 2 முறை அவரை வீழ்த்தி இருக்கிறார்.
இந்த வெற்றி பற்றி மகிழ்ச்சி தெரிவித்த பி.வி. சிந்து, நிலைமை மிக நன்றாக இருந்தது. அடுத்து நடைபெறும் போட்டியிலும் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
எனினும், 2023-ம் ஆண்டு சுவிஸ் ஓபன் போட்டியில், சாம்பியன்ஸ் பட்டம் வென்ற இரட்டையர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, போட்டி நடந்த 7 நிமிடங்களில் ஓய்வு பெற்றனர். சாத்விக்சாய்ராஜ் காயம் அடைந்த நிலையில், அந்த இணை, ஜப்பானிய இணைக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியது.