தென் மண்டல சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி: கர்நாடகா, ஆந்திரா அணிகள் 'சாம்பியன்'
|தென் மண்டல சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கர்நாடகா, ஆந்திரா அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை,
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் முதலாவது தென்மண்டல சப்-ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
கர்நாடக அணியில் ஜாஷன் தம்மையா (9-வது நிமிடம்), காக்ஹன்டாகி ரோகித் (29-வது நிமிடம்), நிஷாந்த் (57-வது நிமிடம்), தமிழக அணியில் கமலேஷ் (31-வது நிமிடம்), சுகுமார் (35-வது நிமிடம்) ஆகியோர் கோல போட்டனர். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆந்திரா 4-2 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியை தோற்கடித்தது.
பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஆந்திரா 5-0 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆந்திர அணியில் ஸ்ரீவித்யா 3 கோலும் (7-வது, 20-வது, 23-வது நிமிடம்), பதன் முஜியா பெகன் (35-வது நிமிடம்), குப்பா துளசி (45-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். இதன் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கர்நாடகா 3-2 என்ற கோல் கணக்கில் கேரளாவை சாய்த்தது.
பரிசளிப்பு விழாவில் தயாநிதி மாறன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். நோவா லைப் பேஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்.செந்தில் குமார், ஆக்கி இந்தியாவின் பொருளாளர் சேகர் மனோகரன், தமிழ்நாடு ஆக்கி அமைப்பின் பொதுச்செயலாளர் பி.செந்தில்குமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.