இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று தந்த நடிகர் மாதவனின் மகன்
|நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று தந்து உள்ளார்.
புதுடெல்லி,
மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடப்பு ஆண்டில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். அவர் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று தந்து நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.
இதன்படி 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தங்க பதக்கங்களை தட்டி சென்று உள்ளார். இதனால், சர்வதேச அளவில் புகழ் பெற்றவராக ஆகியுள்ளார். இந்த மகிழ்ச்சியை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
அந்த பதிவில், கடவுளின் கருணையாலும் மற்றும் உங்களுடைய நல்வாழ்த்துகளாலும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் வார இறுதியில் நடந்த 2023-ம் ஆண்டுக்கான மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற வேதாந்த், இந்தியாவுக்காக (50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர்) 5 தங்க பதக்கங்களை வென்றெடுத்து உள்ளார். மகிழ்ச்சி அடைந்தேன். நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, ஆடவர் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு 3 தங்க பதக்கங்களையும் மற்றும் ஆடவர் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் பிரிவில் 2 வெள்ளி பதக்கங்களையும் வென்று உள்ளார்.