எங்களை பற்றி தவறான தகவல் பரப்பும் சில அரசியல்வாதிகள்; வினேஷ் போகத் பரபரப்பு குற்றச்சாட்டு
|இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான மல்யுத்த போராட்டம் இன்றிரவு 7 மணியளவில் சமூக ஊடகத்தில் நேரலையாக வெளிவரும் என வினேஷ் போகத் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக 12 ஆண்டுகளாக பதவி வகிக்கும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி கடந்த ஜனவரி 18-ந்தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் பி.டி. உஷா தலைமையில், மேற்பார்வை குழு ஒன்றும் மற்றும் அவர்களது போராட்டம் பற்றிய தினசரி நடவடிக்கைகளை கவனிக்கும் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. எனினும், இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், சரண் சிங்குக்கு எதிராக 3 மாதங்களுக்கு பின்னர், கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து மீண்டும் போராட்டம் தீவிரமடைந்தது.
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என பிரிஷ் பூஷண் மற்றும் மல்யுத்த வீராங்கனைகள் என இரு தரப்பினரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றம் நோக்கிய அவர்களது பேரணியின்போது, டெல்லி போலீசார் கைது செய்து, இழுத்து சென்றது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச போகிறோம் என கூறி அவர்கள் சென்றனர். பின்னர், விவசாய சங்க தலைவர் திகாயத் தலையிட்டு, அவர்களை தடுத்து நிறுத்தினார்.
இந்த சூழலில், மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, டெல்லி போலீசார் விசாரணையை நிறைவு செய்ய உள்ளனர். அதுவரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பொறுத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 15-ந்தேதிக்குள் இந்த விசாரணையை டெல்லி போலீசார் நிறைவு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக சமூகத்தில் சில அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட நலன்களுக்காக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
இதனால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான மல்யுத்த போராட்டம் இன்றிரவு 7 மணியளவில் சமூக ஊடகத்தில் நேரலையாக வெளிவரும் என தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இந்த தகவலையே, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் ஆகியோரும் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளனர்.
பா.ஜ.க. தலைவர் யோகேஷ்வர் தத் மீது வினேஷ் போகத், நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் ஊடகங்களிடம் மல்யுத்த வீராங்கனைகளின் பெயர்களை அவர் கசிய விட்டு உள்ளார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். மல்யுத்த வீராங்கனைகளின் குரலை ஒடுக்கும் வேலையில் யோகேஷ்வர் ஈடுபடுகிறார் என அவர் டுவிட்டரில் சுட்டி காட்டினார்.
இரண்டு கமிட்டியிலும் ஒரு பகுதியாக யோகேஷ்வர் இருக்கிறார். இப்படி இருக்கும்போது, கமிட்டியின் முன் மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளை கூறும்போது, அதனை கேட்டு விட்டு யோகேஷ்வர் தத் வாய் விட்டு சிரிக்கிறார். அது எனது மனதில் வந்து சென்றது என கூறியுள்ளார்.
இதெல்லாம் நடந்து கொண்டு இருக்கும். இதனை ஒரு பெரிய விவகாரம் ஆக்க வேண்டாம் என கூறியதுடன், உங்களுக்கு ஏதேனும் வேண்டும் என்றால் என்னிடம் தெரிவியுங்கள் என மற்றொரு வீராங்கனையிடம் யோகேஷ்வர் கூறியுள்ளார். பல வீராங்கனைகளின் வீடுகளுக்கு தொலைபேசியில் அழைத்து, பேசிய அவர், உங்களுடைய மகள்களை புரிந்து கொள்ளும்படி செய்யுங்கள் என கூறியுள்ளார் என வினேஷ் குற்றச்சாட்டு கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தகவலின்படி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்கள் வருகிற ஜூலை 6-ந்தேதிக்கு பதில் ஜூலை 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் மல்யுத்தத்தின் வருங்காலம் வடிவமைக்கப்படுவதில் மற்றும் கூட்டமைப்பின் தலைமையை முடிவு செய்வதில் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறும்.