< Back
பிற விளையாட்டு
பாலியல் துன்புறுத்தல் விவகாரம்; நீண்டகால பதவி, அதிகாரம் கொண்ட நபரை எதிர்த்து நிற்பது கடினம்:  மல்யுத்த வீராங்கனை பேட்டி
பிற விளையாட்டு

பாலியல் துன்புறுத்தல் விவகாரம்; நீண்டகால பதவி, அதிகாரம் கொண்ட நபரை எதிர்த்து நிற்பது கடினம்: மல்யுத்த வீராங்கனை பேட்டி

தினத்தந்தி
|
3 May 2023 8:54 AM IST

நீண்ட காலம் பதவி மற்றும் அதிகாரத்தில் உள்ள சக்தி வாய்ந்த நபரை எதிர்த்து நிற்பது கடினம் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் 3 மாதங்களுக்கு பின் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

டெல்லியில் கடந்த ஜனவரி 18-ந்தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட, ஒலிம்பிக் உள்பட பல்வேறு பிரிவுகளில் சாதனைகளை படைத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பினர்.

இந்த சூழலில், டெல்லி போலீசார் உணவு மற்றும் குடிநீர் தர விடாமல் சித்ரவதை செய்கிறார்கள். போராட்டக்காரர்கள் சாலையில் படுத்து உறங்குங்கள் என அவர்கள் கூறினர் என மல்யுத்த வீரர் பூனியா குற்றச்சாட்டு தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லி போலீசார் கூறும்போது, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம். ஒரு சிறுமி உள்பட மொத்தம் 7 வீரர்கள், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை போலீசார் விரைவில் பதிவு செய்வார்கள்.

பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளின் வழக்கறிஞர் நரேந்திர ஹூடா கூறும்போது, ஐ.பி.சி.யின் பிரிவு 354, 354 (ஏ), 354 (டி) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் ஒரு எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். மற்றொரு எப்.ஐ.ஆர்.ரின் நகல் எங்களுக்கு வழங்கப்படவில்லை (அது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மட்டுமே வழங்கப்படும்) என்று கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர். இதன்படி, கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பொது செயலாளரான பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். இதேபோன்று, டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் அதில் பங்கேற்று பேசினார்.

தொடர்ந்து போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வரும் சூழலில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், நீண்ட காலம் அதிகாரம் மற்றும் பதவியை தவறாக பயன்படுத்தி வரும் நபரை எதிர்த்து நிற்பது என்பது மிக கடினம் என கூறியுள்ளார்.

ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பு அதிகாரி ஒருவரை முதன்முறையாக சந்தித்து பேசினோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

3 முதல் 4 மாதங்களுக்கு முன், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடும் முன்பு, அதிகாரி ஒருவரை சந்தித்து அவரிடம், வீராங்கனைகள் எப்படி பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுகின்றனர் மற்றும் மனதளவில் சித்ரவதை செய்யப்படுகின்றனர் என்று ஒவ்வொரு விசயம் பற்றியும் கூறினோம். எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்