சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா காலிறுதிக்கு முன்னேற்றம்
|மணிகா பத்ரா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் வாங் மன்யுவுக்கு (சீனா) அதிர்ச்சி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா,
சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் போட்டி ஜெட்டா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 39-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 11-6, 11-9, 11-7 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் நினா மிட்டெல்ஹாமை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டம் 22 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் எலைட் உலக டேபிள் டென்னிஸ் தொடரில் காலிறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மணிகா பத்ரா பெற்றார். அத்துடன் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் மிட்டெல்ஹாம்க்கு எதிராக மணிகா பத்ரா பெற்ற முதல் வெற்றியாகவும் இது பதிவானது.
முன்னதாக நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் சரிவில் இருந்து வலுவாக மீண்ட மணிகா பத்ரா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் வாங் மன்யுவுக்கு (சீனா) அதிர்ச்சி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.