< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதி

கோப்புப்படம்

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதி

தினத்தந்தி
|
11 Sept 2024 12:50 AM IST

11-வது புரோ கபடி லீக் போட்டியின் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் சார்பில், அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் உதய்குமார், வியூக பயிற்சியாளர் சேரலாதன், தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணியின் வியூக பயிற்சியாளர் சேரலாதன்,"இந்த சீசனிலும் அணியின் கேப்டனாக சாகர் ரதி செயல்படுவார். தமிழ் தலைவாஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்ல போராடும். கடந்த முறை செய்த தவறுகளை சரி செய்து அணியை பலப்படுத்துவோம். ஏலம் முறையில் வீரர்களை தேர்வு செய்வதால், தமிழ் தலைவாஸ் அணியில் அதிக தமிழ்நாடு வீரர்கள் எடுக்கப்படுவதில்லை, எனினும் தமிழ்நாடு வீரர்களை தேர்ந்தெடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். புரோ கபடி லீக்கில் அனைத்து அணிகளிலும் 25க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வீரர்கள் விளையாடி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

இதன்படி தொடர்ந்து 3-வது முறையாக சாகர் ரதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் தமிழ் தலைவாஸ் அணி 9-வது சீசனில் முதல்முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் கடந்த முறை 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாகர் ரதி, 'தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்த ஆண்டுக்கான அணியில் சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மிகச்சிறந்த நிலையை எட்டுவதே எங்களது இலக்கு. ஒவ்வொரு புள்ளி மற்றும் தடுப்பாட்டத்துக்காக நாங்கள் கடினமாக உழைப்போம்' என்றார்.

மேலும் செய்திகள்