புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி
|ரோகித், சச்சின் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
புனே,
12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு.பி.யோத்தா-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யு.பி.யோத்தா அணி 40-34 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் யு மும்பா- புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த போட்டியில் யு மும்பா அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புனே அணி 1 புள்ளி வித்தியாசத்தில் வீழ்ந்தது.
இன்றைய நாளின் 3-வது போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாட்னா அணி 37-30 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாட்னா வீரர்கள் ரோகித் (9 புள்ளிகள்) மற்றும் சச்சின் (8 புள்ளிகள்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.