< Back
பிற விளையாட்டு
தாமஸ் கோப்பையை வென்று சாதித்த பேட்மிண்டன் வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு
பிற விளையாட்டு

தாமஸ் கோப்பையை வென்று சாதித்த பேட்மிண்டன் வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு

தினத்தந்தி
|
23 May 2022 4:15 AM IST

73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா மகுடம் சூடியது இதுவே முதல் முறையாகும்.

புதுடெல்லி,

சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் இந்திய அணி, பலம்வாய்ந்த இந்தோனேஷியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா மகுடம் சூடியது இதுவே முதல் முறையாகும்.

சாதனை படைத்த இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோரை பிரதமர் மோடி நேற்று காலை நேரில் வரவழைத்து பாராட்டினார். அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடிய பிரதமர் மோடி, 'தேசத்தின் சார்பாக ஒட்டுமொத்த அணிக்கும் பாராட்டுகள். இது சிறிய சாதனை அல்ல. ஆனால் அதை செய்து காட்டி இருக்கிறீர்கள். இந்த வெற்றிப்பயணம் தொடரட்டும். எங்களால் முடியும் என்ற மனப்பான்மை நாட்டில் புதிய பலமாக மாறியுள்ளது. வீரர்களுக்கு அரசு அனைத்து வகையான ஆதரவையும் வழங்கும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இதற்கு முன்பு இந்த போட்டிகளை மக்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் தாமஸ் கோப்பை வெற்றிக்கு பிறகு இந்த அணியையும், பேட்மிண்டன் விளையாட்டையும் கவனிக்க தொடங்கியுள்ளனர்' என்று குறிப்பிட்டார்.

அப்போது பேசிய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த், 'உலகில் வேறு எந்த வீரரும் இதை பற்றி பெருமையாக சொல்ல முடியாது. வெற்றி பெற்ற உடனே உங்களிடம் பேசும் கவுரவம் எங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. உங்களுக்கு மிகவும் நன்றி.பிரதமர் நமக்கு பக்கபலமாக இருப்பதை வீரர்களாகிய நாங்கள் பெருமையுடன் சொல்ல முடியும்' என்றார்.

பிரதமருடன் சந்திப்புக்கு பிறகு தேசிய பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், 'இந்திய வீரர்களையும், விளையாட்டையும் பிரதமர் கவனித்து வருகிறார். அவரது எண்ணங்கள் வீரர்களுடன் இருக்கின்றன' என்றார். உபேர் கோப்பை பேட்மிண்டனில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனைகளும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சியின் போது விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோரும் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்