< Back
பிற விளையாட்டு
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்; பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் சரண் சிங்
பிற விளையாட்டு

உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்; பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் சரண் சிங்

தினத்தந்தி
|
21 May 2023 11:12 PM IST

உண்மை கண்டறியும் சோதனை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியாவுக்கு நடத்தப்பட்டால் அதே சோதனையை செய்து கொள்ள தயார் என்று பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக 12 ஆண்டுகளாக பதவி வகிக்கும் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி கடந்த ஜனவரி 18-ந்தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதுபற்றி, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் பி.டி. உஷா தலைமையில், மேற்பார்வை குழு ஒன்றும் மற்றும் அவர்களது போராட்டம் பற்றிய தினசரி நடவடிக்கைகளை கவனிக்கும் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. எனினும், இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், பா.ஜ.க. எம்.பி.யாகவும் இருந்து வரும் சரண் சிங்குக்கு எதிராக 3 மாதங்களுக்கு பின்னர், கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து மீண்டும் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் தொடுத்த வழக்கு பற்றிய விசாரணையில், 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் புகார் அளித்த சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என கூறி, அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது. இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். மூத்த வீரர்களிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி முடிவு செய்வோம் என கூறினர். இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் டெல்லி, ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் உள்பட அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்து, போராட்டம் நடைபெறும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வருகை தந்து, அவர்களுக்கு தங்களது ஆதரவை வழங்கினர்.

இந்த போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அவர்கள் சார்பில், நடுநிலையாளராக செயல்பட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தனது விருப்பத்தினையும் அவர் வெளியிட்டு, அவர்களுக்கு உறுதி கூறினார். இதுதவிர, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியா நகரில் வருகிற ஜூன் 5-ந்தேதி சேத்னா மகா பேரணி நடைபெற உள்ளது. இதற்கான மக்கள் ஆதரவை பெறுவதற்காக பிரிஜ் பூஷண் டெல்லியில் இருந்து கோண்டா நகருக்கு வந்துள்ளார். கெய்சர்கஞ்ச் தொகுதியை சேர்ந்த மக்களவை எம்.பி.யான அவர், தனது தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை சந்திக்கிறார்.

2014-ம் ஆண்டே அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பினேன் என்று கூறிய அவர், ஆனால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, என்னை ஓய்வு பெற விடவில்லை என்றும் அவர் கேட்டு கொண்டதற்காக அரசியல் பணியை தொடர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

அவரிடம் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொய்களை பேச வேண்டும் என சிலர் முடிவு செய்து விட்டால், பின்னர் அதனை அவர்கள் செய்து விட்டு போகட்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரிஜ் பூஷண் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், நார்கோ சோதனை, பாலிகிராப் சோதனை அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார். அதே சோதனை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியாவுக்கும் நடத்தப்பட்டால் அதற்கு தயார் என பதிவிட்டு உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் உண்மை கண்டறியும் சோதனைக்கு வரும்படி பிரிஜ் பூஷண் சிங்கிற்கு மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் சவால் விடுத்து பேசினார்.

அவருக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 7 பேர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில், அவர் மீது அவருக்கே நம்பிக்கை இருக்கும் என்றால், உண்மை கண்டறியும் சோதனைக்கு அவர் முன்வரட்டும் என சாக்சி கூறினார்.

நாங்களும் இந்த சோதனைக்கு உட்பட தயாராக இருக்கிறோம். யார் குற்றவாளி என்றும் யார் குற்றவாளி அல்ல என்றும் உண்மை வெளியில் வரட்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்