< Back
பிற விளையாட்டு
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிற விளையாட்டு

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
22 Aug 2023 7:25 AM IST

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார்.

முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நேற்று நடந்தது. இதில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை அரை இறுதி போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார்.

ரேபிட் முறையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு அவர் முன்னேறினார். இதனைத்தொடர்ந்து இறுதி போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாட உள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

உலகக்கோப்பை செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துகள். இறுதிப்போட்டியில் கார்ல்செனை எதிர்த்து விளையாடவும் எனது வாழ்த்துகள். ஜொலித்துக் கொண்டே இருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்