யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி!
|யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி தகுதி பெற்றுள்ளது.
லிஸ்பன்,
17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ சாம்பியன்ஷிப்) ஜெர்மனியில் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்கிறது. போட்டியை நடத்தும் நாடான ஜெர்மனி தவிர எஞ்சிய 23 அணிகள் தகுதி சுற்று மூலம் இந்த போட்டிக்கு தகுதி காணும்.
இதில் பங்கேற்றுள்ள 23 அணிகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. 7 பிரிவுகளில் தலா 5 அணிகளும், 3 பிரிவுகளில் தலா 6 அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை லீக்கில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.
இந்நிலையில் நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி தனது 7 வது லீக் ஆட்டத்தில் ஸ்லோவேக்கியா அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோ 2 கோல்கள் அடித்தார். மேலும் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 'ஜே' பிரிவில் இருந்து போர்ச்சுகல் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.